அங்கே சென்று சிறிது நேரம் சிரித்து இளைப்பாறிவிட்டு நகர்ந்தேன். புக்வோர்ல்ட் புத்தக கடையின் ஸ்டாலில் ஒரே ஆங்கில புத்தகங்களாக குவித்து வைத்திருந்தனர். பல உபயோகமான குண்டு குண்டு புத்தகங்களும் வெறும் 150ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆங்கில புத்தகங்களோடு எனக்கு வம்புசண்டை கத்திக்குத்து என்பதால் நான் எதையும் வாங்கவில்லை. ஆங்கில புத்தக பிரியர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய கடை புக் வேர்ல்ட். நோட் திஸ் பாய்ன்ட் யுவர் ஆனர்.
புரட்சி புத்தகங்களுக்கு பேர் போன நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் நிறைய மாற்றங்கள். மொக்கை புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அதற்கு நடுவில் அந்தகாலத்து கம்யூனிச ரஷ்ய பதிப்புகளாக வெளியான கம்யூனிச புத்தகங்களும் கிடைக்கின்றன. மிக மிக நேர்த்தியாக அச்சிடப்பட்ட அப்புத்தகங்கள் வெளியே பார்க்க பரவசமூட்டினாலும், பிரித்து படித்தால் புரட்டி போடும் ஜிலேபி மொழிபெயர்ப்பு. விலை அச்சிடப்படவில்லை. அக்கால ரஷ்யன் தமிழ் அகராதிகூட மலிவு விலையில் கிடைக்கிறது. நான் எதையும் வாங்கவில்லை. வேடிக்கை மட்டும் பார்த்து விட்ட வெளியே வந்து பேச்சரங்கில் அமர்ந்தேன்.
எங்கள் தலைவி சார்த்தரின் வாரிசு தமிழச்சி பேசிக்கொண்டிருந்தார். சார்த்தரும் புத்தக கண்காட்சியும் என்று பேசுகிறாரோ என்கிற பயத்தோடு அமர்ந்தேன். நான் அமர அவர் பேசி முடித்தார். ராஜ்டிவி அகடவிகடம் புகழ் அப்துல்காதர் நகைச்சுவையாக பேசினார். ஆனால் நிறைய டபுள் மீனிங் வசனங்கள்.. பெண்களையும் குழந்தைகளோடு வந்திருந்தவர்களையும் நெளிய வைத்தது. எனக்கும் உச்சா முட்டிக்கொண்டிருந்ததால் கழிவறை பக்கம் ஒதுங்கினேன்.
உள்ளே போனால் போலீஸ் காரர் ஒருவர் கையில் வாக்கி டாக்கியை பிடித்தபடி கிளியர் கிளியர் என்றார். பவுடர் அடித்த குரங்கு போல் இருந்தது பிளீச்சிங் பவுடர் நிரம்பி வழியும் அந்த கழிவறை. தண்ணீர் வசதி கிடையாது, சிறுநீரெல்லாம் எந்த கனெக்சனும் இல்லாமல் மண்ணுக்கே பாய்கிறது. எத்தனை அவசரமாக இருந்தாலும் தவிர்ப்பது நன்று. வியாதிகள் கியாரண்டீட்.
வெறுத்துப்போய் ஞானியின் கடைப்பக்கம் ஒதுங்க, அங்கு எப்போதும் போல பாரதியாரின் படம் விற்பனையாகிக்கொண்டிருந்தது. இம்முறை காந்தி படமும் சேர்த்து விற்றுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பல நாட்களாக தேடிக்கொண்டிருந்த ஜங்கிள் புக்கின் தமிழாக்கம் (ஒரிஜினலின் மொழிபெயர்ப்பு) கிடைத்தது. உமாப்பதிப்பகத்தில் குறைந்த விலையில் (ரூ.40) போட்டிருக்கின்றனர். புத்தகம் பழையதாக இருந்தாலும் வொர்த்தான நூல். அதே போல நர்மதாவில் காமசூத்ரா புத்தகம், கொக்கேக சாஸ்திரத்துடன் இணைக்கப்பட்டு கிடைக்கிறது. 200ரூபாய்தான். கட்டிளங்காளைகள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். நான் சென்ற ஆண்டே வாங்கிவிட்டேன். இருந்தாலும் இந்த ஆண்டும் புத்தகம் கிடைப்பதால் பொதுநலன் கருதி இத்தகவல் இங்கே. அங்கேயே இயக்குனர் சிம்புதேவன் உதவி இயக்குனராக இருந்த போது வரைந்து எழுதிய கிமுவில் சோமு என்கிற காமிக் புத்தகம் 40 ரூபாய்க்கு கிடைத்தது. உடனே ஒன்றை பார்சல் செய்துவிட்டேன்.
என்னோடு வந்த தோழர் நர்மதாவிலேயே அசோகமித்திரனின் யுத்தங்களுக்கிடையே நாவல் வாங்கினார்.
ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் புத்தகம் பூம்புகார் பதிப்பகத்தில் வாங்கினேன். மூன்று பாகங்கள் கொண்ட இப்புத்தகம், மொத்தமாக 150ரூபாய்க்கு கிடைக்கிறது. லைலா மஜ்னூவின் கதையும் தனிப்புத்தகமாக அதே பதிப்பகத்தில் கிடைத்தாலும் நான் வாங்கவில்லை.
பதிவர்கள் சிலரும், பாராவும் அமர்ந்து ஏதோ முக்கியமான காரியம் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். கிழக்கிலும் உயிர்மையிலும் நல்ல கூட்டம். ஆனந்த விகடனிலும் நல்ல கூட்டம். ஏதாவது வாங்கலாமென்கிற ஆசையோடு உள்ளே நுழைந்தேன்.. புத்தக விலையெல்லாம் வெங்காய விலைக்கு இணையாக இருந்தன. 300 ஜோக்குகள் என்கிற குட்டி புத்தகம் 80 ரூபாயாம்! நான் இன்னும் சாருநிவேதிதாவைப் போல பிரபல எழுத்தாளர் ஆகவில்லையே , இவ்வளவு விலை கொடுத்து புத்தகங்கள் வாங்க! நேற்றைய தினம் சுபமாய் முடிந்தது.
இன்றும் போக நினைத்திருக்கிறேன். வாசகர்கள் என்னுடைய எழுதப்படாத புத்தகத்தில் ஆட்டோகிராப் வாங்க நினைத்தால் மாலை ஆறுமணிக்குமேல் 8.30க்குள் என்னை தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து பெற்றுக்கொள்ளலாம்!
No comments:
Post a Comment
THANK YOU