Wednesday, 2 January 2013

நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி

இது ஒரு சீரியஸ் பதிவு. இந்தப் பதிவைப் படித்துவிட்டு யாரும் சிரிக்கக்கூடாது. அப்படி சிரிப்பவர்கள் அடுத்த ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப் படுத்தப்படுவார்கள்

எல்லா நாடுகளிலும் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக ஆராய்ச்சிக்கூடங்கள் இருப்பது நீங்கள் அறிந்ததே. அங்கே நடைபெரும் ஆராய்ச்சிகளுக்காக பெரிய வியாபார நிறுவனங்கள் அதிகமான நன்கொடை கொடுப்பார்கள்.

அந்த நன்கொடையைக் கொண்டு விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து புதிது புதிதாக ஏதாவது கண்டு பிடிப்பார்கள். இத்தகைய கண்டுபிடிப்புகள்தான் மனித வாழ்வை மேம்படுத்த உதவுகின்றன.

அப்படி ஒரு ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி ஒரு பெரும் தொகையை தன்னுடைய ஆராய்ச்சிக்காகப் பெற்று அந்த ஆராய்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். அதாவது மனிதனுக்கு வியாதியே வராமல் தடுப்தற்காக ஒரு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி.

பலநாட்கள் கஷ்டப்பட்டு அந்த மருந்தைக் கண்டுபிடித்தார். அந்த மருந்து எப்படி செயல்படுகிறது என்று பார்க்கவேண்டுமல்லவா? அதற்காக நூறு எலிகளைப் பிடித்து கூண்டில் அடைத்து அவைகளுக்கு இந்த மருந்தை தினமும் கொடுத்து வந்தார்.

ஒரு வாரத்தில் அந்த எலிகள் எல்லாம் இறந்து விட்டன. சாதாரண விஞ்ஞானியாக இருந்தால் தன்னுடைய ஆராய்ச்சி தோற்றுவிட்டதே என்று மனதொடிந்து போயிருப்பார். ஆனால் இந்த விஞ்ஞானியோ மிகவும் புத்திசாலி (என்னை மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்).

என்ன செய்தார் தெரியுமா? மளமளவென்று காகிதத்தை எடுத்து " 100 சதம் வெற்றி" என்று தலைப்பை எழுதினார். அதன் கீழ் மிகவும் விரிவாக பத்து பக்கங்களுக்கு தான் அந்த மருந்தைக் கண்டுபிடித்த விதம், எலிகளுக்கு அதைக் கொடுத்தது எப்படி, அவை எவ்வாறு இறந்தன, இறந்த எலிகளை என்ன செய்தார் என்ற விவரங்களை விலாவாரியாக எழுதி, அந்த அறிக்கையை பணம் கொடுத்த நிறுவனத்திற்கும் அந்த ஆராய்ச்சி நிறுவனத் தலைவருக்கும் அனுப்பிவிட்டார்.

இத்தகைய ரிப்போர்ட்டுகளை ஆராய்ச்சி நிறுவனத்தில் யாரும் படிக்கமாட்டார்கள். தலைவர், கோப்பில் வைக்கவும் என்று எழுதிக் கையெழுத்து போட்டு ரிக்கார்டு ரூமுக்கு அனுப்பிவிடுவார். அங்கு அதை கரப்பான் பூச்சிகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.

இந்த ஆராய்ச்சிக்காக பணம் கொடுத்த நிறுவனத்தில் அவர்கள் செலவழித்த பணத்திற்கு இதுதான் அத்தாட்சி. அங்கு இந்த மாதிரி ரிப்போர்ட்டுகளைப் படித்து, ஏதாவது குறிப்புடன் ஆடிட் செக்ஷனுக்கு அனுப்புவார்கள். அவர்களும் இந்த ரிப்போர்ட்டுகளை முழுவதுமாகப் படிக்க மாட்டார்கள்.

அங்கு இதைப் பார்க்கும் ஆடிட்டர் "100 சதம் வெற்றி" என்கிற தலைப்பைப் பார்த்தவுடன் ஆஹா, நல்ல ஆராய்ச்சி என்று குறிப்பெழுதி, இந்த விஞ்ஞானிக்கு மேலும் ஆராய்ச்சிக்காக பணம் கொடுக்கலாம் என்று சிபாரிசு செய்வார்.

அந்த விஞ்ஞானியும் மேலும் இந்த மாதிரியான பல ஆராய்ச்சிகள் செய்து பேரும், புகழும், செல்வமும் அடைவார்.

No comments:

Post a Comment

THANK YOU