“மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற்
கடைக்கண் வைத்தா எங்கேஆகா
வென் றெழந்து பார்யுகப் புரட்சி;
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்
வாகான தோள்புடைத்தார் வானமார்
பேய்களெல்லாம் வருந்தக் கண்ணீர்
போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம்;
வைத்தீர் புதுமை காணீர்!”
என்று பாரதியார் ‘புதிய ரஷ்யா” என்ற தலைப்பில் எழுதிய கவிதையில் குறிப்பிடுகிறார்.இது ரஷ்யாவில் நடந்த புரட்சியைத் தலைமை ஏற்று நடத்தியவர் லெனின். உலகிலுள்ள முற்போக்குச் சிந்தனையாளர்கள் அனைவரும் இவரை தோழர் லெனின் என்று இன்னும் அழைத்து வருகின்றனர்.
இவரது இயற்பெயர் ‘விளதிமீர் இல்யிச் உல்யானவ்.’
இல்யா நிகலாயெவிச் - மரீயா அலெக்சாந்த திரவனா பிளாக் தம்பதிக்கு, வால்கா நதிக்கரையில் உள்ள ஸிம் பீர்ஸ்க் என்ற நகரத்தில் 1870 ஏப்ரல் 10 - ல் லெனின் பிறந்தார்.
லெனினுக்கு அலெக்ஸாந்தர், திமீத்ரிய் என்ற சகோரதரர்களும், ஆன்னா, மரீயா, ஓல்கா என்ற சகோதரிகளும் இருந்தனர்.
பெற்றோர் தெய்வ நம்பிக்கையிலும், மதச் சடங்குகளிலும் ஈடுபாடு உடையவர்கள். அதனால், ஞாயிற்று கிழமைகளில் குடும்பம் முழுவதும் மாதா கோவிலுக்குச் செல்வது வழக்கம்.
அலெக்ஸாந்தருக்கு மத நம்பிக்கைகளில் பற்று இருந்ததில்லை. சுயமாக சிந்திக்கவும் முடிவெடுக்கவும் லெனினுக்கு வாய்ப்பு ஏற்பட்ட போது, அண்ணன் வழியில் செயல்பட விரும்பினார். அதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் மாதா கோவிலுக்குச் செல்கின்றபோது, லெனினும் அவரது அண்ணனும் கோயிலுக்குச் செல்ல மறுத்தனர்.
பெற்றோர்கள் தந்தை ஆசிரியராகவும், பள்ளி மேற்பார்வையாளராகவும் பணியாற்றினார். தாயாரும் ஆசிரியராகப் பணியாற்றினார். அதனால் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர் தனிக்கவனம் செலுத்தினர்.
விளையாட்டு, படிப்பு, எதிலும் புதுமையை விரும்புதல் ஆகியவற்றல் லெனின் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் திகழ்ந்தான்.
பள்ளியில் படிக்கின்ற பொழுதே இலத்தீன், கிரேக்க மொழிகளில் லெனின் தேர்ச்சி மிக்க மாணவராகத் திகழ்ந்தார். மற்றவர்களுக்கு இந்த மொழிகளில் பாடம் நடத்தும் அளவுக்கு அவர் திறமை பெற்றிருந்தார்.
பீட்டர்ஸ் பர்க் பல்கலைக்கழகத்தில் அலெக்ஸாந்தர் படத்துக் கொண்டிருபோது முற்போக்கு ரஷ்ய வாலிபர்களோடும், தீவிரவாத இயக்க மாணவர்களோடும் தொடர்பு கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 21.
ஜார் மன்னனைக் கொல்வதன் மூலமே ரஷ்ய மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அலெக்ஸாந்தர் மிகவும் உறுதியாக இருந்தார். அதற்கான ரகசியச் செயல்களிலும் ஈடுபட்டார்.
இந்தக் காலகட்டத்தில் லெனினுடைய தந்தை மறைந்தார். மிகப் பெரிய குடும்பத்தை வழிநடத்ததிச் சென்ற அதன் தலைவர் திடீரென மறைந்தது குடும்பத்தை அதிர்ச்சியில் தள்ளியது. இந்தத் துயரிலிருந்து அந்தக் குடும்பம் விடுபடுவதற்குள் 1887 மார்ச் 1 - ஆம் தேதி ஜார் மன்னனின் காவல் துறையினரால் அலெக்ஸாண்டர் கைது செய்யப்பட்டார்.
குடும்பத் தலைவர் மரணம்; குடும்பத்தின் மூத்த மகன் சிறையில், அதனால் லெனின் குடும்பம் வேதனையில் சிக்கியது.
1887, மே 8-ம் தேதி அதிகாலையில் ஷூஸெல் ப்ர்க் கோட்டையில் மன்னரின் அதிகாரிகளால் அலெக்ஸாண்டர் தூக்கிலிடப்பட்டார்.
சிறுவயது முதல் அண்ணனோடு பழகிய சம்பவங்களும் தமக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கெல்லாம் அவர் சொன்ன விளக்கங்களுக்கும், மத வெறுப்பும், மக்கள் சிறப்பாக வாழ வேண்டுமென்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் லெனினைச் சிந்திக்க வைத்தன.
உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் லெனின் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார் அதற்குரிய தங்கப் பதக்கத்தைக் கொடுப்பதற்கு பள்ளி நிர்வாகம் தயங்கியது. தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டு மன்னரைக் கொலை செய்ய முயன்ற ஒருவரின் தம்பிக்கு தங்கப்பதக்கம் கொடுக்கலாமா? அதன்மூலம் மன்னரின் கோபத்திற்கு உள்ளாக நேரிடுமா? அண்ணனைப் போன்று லெனினுக்கும் தீவிரவாத இயக்கத்தில் தொடர்பு இருக்குமா? போன்ற கேள்விகள் எழுந்ததால் பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் லெனினுக்குத் தங்கப் பதக்கம் கொடுப்பதைத் தள்ளிப் போட்டனர். இறுதியில் வேறு வழியின்றி லெனினுக்குத் தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது.
கஸான் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டம்படிக்க லெனின் விரும்பினார். ஆனால் லெனினுடைய அண்ணனைப் பற்றியும், அவருடைய மரணத்தைப் பற்றியும் அறிந்திருந்த பல்கலைக்கழக நிர்வாகம் லெனினைச் சேர்த்துக்கொள்வதில் தயக்கம் காட்டியது.
இறுதியில் லெனின் படித்த உயர்நிலைப்பள்ளியில் லெனினைப் பற்றி விசாரித்து அறிந்த பின்பே பல்கலைக் கழகத்தில் சேர்த்தனர்.
பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடங்கிய லெனின் அங்குள்ள முற்போக்கு சிந்தனையுள்ள மாணவர்களுடன் இணைந்தார். அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கெல்லாம் லெனின் சென்றார்.
நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக் கழக மாணவர்கள் போராடத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தில் லெனின் கலந்து கொண்டார். அதனால் லெனினையும் மற்ற மாணவர்களையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. அதன் பின் பல்கலைகழகம் லெனினை வெளியேற்றியது.
ஒரு கதவு அடைத்தால் மறு கதவு திறக்கும். எழுந்தவர் பணித்தில்லை என்பதற்கு மறு இலக்கணமாக லெனின் வாழ்ந்து காட்டினார். தனியாகப் பயின்று 1891-ல் சட்டப் படிப்பில் லெனின் தேர்ச்சி பெற்றார்.
ஜெர்மனியில் தோன்றி காரல் மார்க்ஸ் என்ற பேரறிஞர் எழுதிய மூலதனம் என்ற நூலை லெனின் படித்தார். இந்த நூல் லெனினைத் தொழிலாளர்களுக்குப் பாடுபடத் தூண்டியது.
லெனின் பீட்டர்ஸ்பர்க்கில் வாழ்ந்த போது, அங்குள்ள பஞ்சாலைத் தொழிலாளர்களோடு பழகினார். அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்காக வழி காட்டினார் காரல் மார்க்கஸின் கருத்துக்களையெல்லாம் அவர்களிடத்தில் பரப்பினார். இதை அறிந்த ஜார் மன்னன் லெனினைக் கைது செய்து, மூன்று ஆண்டு சிறைத் தண்டனை கொடுத்து சைபீரியாவிற்கு அனுப்பினான்.
பீட்டர்ஸ்பர்க்கில் இருந்த மாலை நேரப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த குருப்ஸ்காயா என்ற பெண்மணி கம்யூனிஸ இயக்கம் ஒன்றில் உறுப்பினராகவும் இருந்தார். அதனால் குருப்ஸ்காயாவும் ஜார் மன்னனின் கோபத்திற்கு ஆளானார். அதன் விளைவாக குருப்ஸ்காயாவும் சிறையில் அடைக்கப்பட்டார்.
லெனினுடைய மேதமை குருப்ஸ்காயாலையும்; குருப்ஸ்காயாவின் பொதுவாழ்வுச் செயல்கள் லெனினையும் ஈர்த்தன. அந்த ஈர்ப்பு காதலாக மலர்ந்தது. அந்தக் காதல் 1898 ஜூலை 10 அன்று திருமணத்தில் முடிந்தது.
தண்டனை முடிந்ததும், லெனின் ஜெர்மனிக்குச் சென்றார். அங்கிருந்து ஒரு பத்திரிகை நடத்தினார். அந்தப் பத்திரிக்கையில் ரஷ்ய மன்னனின் கொடுங்கோன்மை பற்றியும் ரஷ்யத் தொழிலாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் எழுதிக் குவித்தார். அது ரஷ்யத் தொழிலாளர்களுக்கு வழிகாட்டின.
அதன் பின் ரஷ்யா வந்த லெனில் 1905 - ல் நடத்திய புரட்சி தோல்வியைத் தழுவியது.
மீண்டும் மன்னராட்சி லெனினையும், தொழிற்சங்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் ஒடுக்கியது.
அடித்த பந்து திரும்புவது போன்று ஜார் மன்னின் கொடூரச் செயல்கள் எல்லாம் அவனையே சூழ்ந்தது.
1917 பிப்ரவரியில் மீண்டும் லெனின் தலைமையில் மாபெரும் புரடசி வெடித்தது. ஜார் மன்னனும் அவனது கூலிப்படைகளும் தோல்வியைத் தழுவினர். ஆனால் குழப்ப நிலைமையே நீடித்தது. அதனால் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக இடைக்கால சர்க்கார் ஒன்று அமைக்கபட்டது. அந்த இடைக்கால சர்க்காரில்,1. இளவரசன் லாவவ் -மிகப்பெரிய நிலப்பிரபுவான இவன் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றான்.
2. மிலியூகோவ் - பிற்போக்காளர்களின் கட்சியான காடெட் என்ற கடசியின் தலைவனான இவன் வெளி விவகார ம்திரியாக நியமிக்கப்பட்டான்.
3. குச்சோவ் - மிதவாதக் கட்சியின் தலைவனான இவன் இராணுவ மந்திரியானான்.
4. தெரெஷென்கோ - மிகப் பெரிய ஆலை முதலாளியான இவன், தொழில் வர்த்தக மந்திரியாகத் தேர்வு செய்யப்பட்டான்.
5. கானோவோலால் - இவனும் மிகப் பெரிய ஆலை முதலாளிதான். இவனுக்கு நிதிமந்திரி பொறுப்பு கொடுக்கப்பட்டது.
6. செரன்ஸ்கீய - மென்ஷ்வீங்குகளின் தலைவனான இவன், சட்ட மந்திரியாகத் தேர்வு செய்யப்பட்டான்.
ஜார் மன்னனையும், அவனுடைய அடிவருடிகளாகச் செயல்பட்ட நிலமுதலாளிகள், தொழில் அதிபர்கள் ஆகியோரையும் வீழ்த்துவதற்காகத்தான் லெனின் புரட்சியை நடத்தினார். ஆனால் ஜார் மன்னன் ஒழிந்தாலும், அவனுடைய அடிவருடிகள் அழிக்கப்படவில்லை என்பதை இடைக்கால அமைச்சரவையின் நியமனம் நிரூபணம் செய்தது. அதனால் இந்த இடைக்கால அரசையும் வீழ்த்த வேண்டும் என்று லெனின் மக்களிடம் முழங்கினார்.
அதிகாரத்தைக்கொண்டு லெனினை வீழ்த்திவிட இடைக்கால அரசு திட்டமிட்டது.
இரண்டு தரப்பினருக்கும் இடையில் வலுவான கருத்துப் போர்கள் நடந்தன.
லெனினை சிறைப்பிடிக்க இடைக்கால அரசு முயன்றது. ரஷ்யாவிலிருந்து தப்பிச் சென்ற லெனின் வெளிநாட்டிலிருந்து ரஷ்யத் தொழிலாளர்களை மீண்டும் ஒரு புரட்சிக்குத் தயார்படுத்தினார்.
தொழிலாளர் வர்க்கமும், பொதுமக்களும் லெனின் தலைமையில் அணி திரண்டனர்.
1917 நவம்பர் 7-ல் லெனின் தலமையில் புறப்பட்ட புரட்சிப்படை இடைக்கால அரசை நீங்கி சோவியத் குடியரசை அமைத்தது.
லெனின் தலைமையில் பதினைந்து பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டது. அந்த அமைச்சரைவையில் இருந்த அமைச்சர்கள் கமிசார் என்று அழைக்கபட்டனர். லெனின் தலைமையில் உருவான அமைச்சரவைப் பட்டியல்;
1.லெனின் - அமைச்சரவைத் தலைவர்
2. ரிக்கால் - உள்நாட்டு அமைச்சர்
3. மில்யூதின் - விவசாய அமைச்சர்
4. ஷல்யாப் நிக்கோவ் - தொழிலாளர் அமைச்சர்.
5. மூவல் கொண்ட ஒரு குழுவிடம் இராணுவமும் கடற்படையும் ஒப்படைக்கப்பட்டது.
6. நோகின் - தொழில் அமைச்சர்
7. லூர்னார்ஸ்கி - கல்வி அமைச்சர்
8. ஸ்தெப்பனால் - நிதி அமைச்சர்.
9. தீராஸ்கீப் - வெளி விவாகார அமைச்சர்.
10. லோமாவ் - சட்ட அமைச்சர்
11. தியோடாவிச் - உணவு அமைச்சர்.
12 அவிலோல் - தொலைத்தொடர்பு அமைச்சர்.
13. ஸ்டாலின் - தேசிய இனங்களின் அமைச்சர்
உலகத்தில் முதன் முதலாக புரட்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் லெனின்.
மாணவர்கள் மீதும், அவர்கள் வளர்ச்சியின் மீதும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் லெனின்.
“Read, Read, Read and Read” என்று மாணவர்களுக்குச் சொன்னார் லெனின்.
இந்த வாசகங்களை அன்று லெனின் மாணவர்களுக்காகச் சொல்லி இருந்தாலும், உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் சொல்லப்பட்டதாகவே தோன்றுகிறது.
இத்துணை சிறப்புக்களுக்குச் சொந்தக்காரரான லெனின், 1918 ஆகஸ்ட் 30 அன்று ஒரு தொழிலாளர் கூட்டத்தில் பேசிவிட்டு, தனது காரில் ஏறப்போனார். அப்போது காருக்கு அருகில் இரண்டடி தூரத்தில் நின்று கொண்டிருந்த பானிகாப்ளான் என்பவன் மூன்று முறை துப்பாகியால் லெனினைச் சுட்டான்.
சின்னஞ்சிறு காயங்களுடன் லெனின் தப்பினார்.
இருப்பினும் 1924- ஜனவரி 21 அன்று லெனின் மறைந்தார்.
லெனின் மறைந்தாலும், புதுமை விரும்பிகளின் நெஞ்சங்களில், இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
No comments:
Post a Comment
THANK YOU